
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நேற்று (ஆகஸ்ட் 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும். கஸ் அட்கின்சன் அரைசதம் கடந்து 74 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 115 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சனின் சதங்கள் இங்கிலாந்து அணிக்கு வலுவான ஸ்கோரைக் கொடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிலன் ரத்நாயகே மற்றும் லகிரு குமாரா தலா 2 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.