
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சிறிது காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ரஷித் கான் வலம் வருகிறார். அவர் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கானின் பெயர் இடம்பெறவில்லை.
முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் ரஷித் கான் அடுத்த ஓராண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவரது வேலைப் பளுவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவதே எங்களது திட்டம். அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் விளையாடப் போவதில்லை என்பதும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டியிருக்கும். முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பந்துவீசுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் ரஷித் கான் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ரஷித் கான் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பின்,4 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.
பின்னர், டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை ரஷித் கான் கேப்டனாக வழிநடத்தி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.