
செய்யறிவு(ai) செயலியின் வளர்ச்சி மிகவும் வேகமடைந்தாலும் தங்களுக்கு தேவையான தகவல்களை மக்கள் கூகுளில் தேடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தேடு தளமான கூகுள் நமது அறிவுத்தேடல் முதல் மனதில் எழும் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் நம் விருப்பங்கள் என அ முதல் ஃ வரை விடையளிக்கும் தளமாக உள்ளது.
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் மக்களின் எல்லையற்ற ஆர்வத்திற்கு விடையளிக்கும் தேடு தளமான கூகுளில், உலகளவில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கான தேடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவற்றில் 15 சதவீதம் புதிய, புதிய தேடல்களாக இருக்கின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வரும் கூகுள், நடப்பாண்டில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.
அதாவது, நடப்பு 2024 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான மக்களின் தேடல் எதை நோக்கி இருந்துள்ளது. நாட்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்?, மக்கள் மிக அதிகமாக தேடிப் படித்த தகவல்கள் எது என்பதை தற்போது கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நட்சத்திர வீரர்களான கிரிக்கெட்டில் புகழ்பெற்ற விராட் கோலி, உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, கால்பந்து ஜாம்பவான்கள் லியோனல் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் பெயர்கள் முதல் பத்து இடங்களில் இடம்பிடிக்கவில்லை.
முதல் பத்து இடங்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சையில் சிக்கி தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலீப், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், 16 வயதான ஸ்பெயின் கால்பந்து வீரர் லேமின் யாமெல், அமெரிக்க ஜிம்னாஸ்ட் சிமோன் பைல்ஸ், இந்திய வீரர்களில் உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, ஐபிஎல்லி பஞ்சாப் அணியால் தவறுதலாக வாங்கப்பட்டு தனது அதிரடியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ஷஷாங் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ஷஷாங் சிங் 14 போட்டிகளில் 354 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.