
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2024 ஆம் ஆண்டில், பல்வேறு அணிகளின் முக்கிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.
விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பது என்பது மிகவும் கடினமான தருணம். ஒருசில வீரர்களுக்கு மட்டுமே கையில் கோப்பையுடன், ரசிகர்களின் கோஷங்களுக்கு இடையே உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 உலகக் கோப்பை பெற்ற கையுடன் அந்த வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இந்தாண்டு ஓய்வுபெற்ற டாப் 10 வீரர்கள்
ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, இந்தாண்டு ஜூன் 29-ஆம் தேதி டி20 உலகக் கோப்பை பெற்ற கையுடன், சர்வதேச டி20 வகை போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், இறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை இந்தாண்டு வாங்கிக் கொடுத்த ரோஹித் சர்மா,
தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து வருகிறார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும், டி20 உலகக் கோப்பை வென்றவுடன் அந்த வகை தொடரில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில், 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக, இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணம் ஆனார்.
மொத்தம் 125 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர், டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியவுடன் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு முடிவை அறிவித்தார்.
112 டெஸ்ட் போட்டிகளில் 8,786 ரன்கள், 161 ஒருநாள் போட்டிகளில் 6,932 ரன்கள், 110 டி20 போட்டிகளில் 3,277 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் 49 சதங்கள், 98 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இரண்டு ஐசிசி உலகக் கோப்பை, ஒரு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் அங்கமாக இருந்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
42 வயதான இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், குறைந்த ரன்களை வழங்கி, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக இருந்த நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அனைத்துவித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
188 டெஸ்ட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது வீரரானார். முதல் இரண்டு இடத்தில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே உள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் 991 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள ஆண்டர்சன், 2010 டி20 உலகக் கோப்பை வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் விளையாடினார்.
ஷிகர் தவான்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கும் இந்திய அணியின் தொடக்க வீரராக ஜொலித்தவர் ஷிகர் தவான்.
இளம் தொடக்க வீரர்களின் எண்ணிக்கை இந்திய அணியில் அதிகம் இருப்பதால், 2022 டிசம்பருக்கு பிறகு தவானுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அதனால், இந்தாண்டு அனைத்து விதமான சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தவான் அறிவித்தார்.
167 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 39 அரைசதங்களுடன் 6,793 ரன்களை தவான் குவித்துள்ளார். 34 டெஸ்ட்டில் 2,315 ரன்கள்(7 சதங்கள், 5 அரைசதங்கள்), 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்கள்(11 அரைசதங்கள்) எடுத்துள்ளார்.
மொயின் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மொயின் அலி, ஆஷஸ் தொடருக்கு பிறகு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் 6,678 ரன்கள் குவித்துள்ள மொயின் அலி, 366 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2019 ஐசிசி உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார்.
டிம் செளதி
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் செளதி இங்கிலாந்து அணியுடனான தொடருடன் இந்தாண்டு ஓய்வை அறிவித்தார்.
776 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தின் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
391 டெஸ்ட் விக்கெட்டுகள், 221 ஒருநாள் விக்கெட்டுகள், 164 டி20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
மேலும் நியூசிலாந்து அணிக்காக 394 போட்டிகளில் 3,288 ரன்கள் குவித்து பல சமயங்களில் பேட்டிங் மூலம் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
ரவிசந்திரன் அஸ்வின்
கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிசந்திரன் அஸ்வின் இந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் - காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற அஸ்வின், மூன்றாவது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார்.
106 டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள், இதில், 37 முறை 5 விக்கெட்டுகள், 8 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 7வது வீரர் ஆவார். இந்தியாவின் இரண்டாவது பந்துவீச்சாளர்.
மேலும், 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3,503 ரன்களும் குவித்துள்ளார்.
116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகள், 707 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 287 போட்டிகளில் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார்.
டீன் எல்கர்
தென்னாப்பிரிக்கா அணியின் டீன் எல்கர் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் இந்தாண்டுடன் ஓய்வை அறிவித்தார்.
86 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 23 அரைசதங்களுடன் 5,347 ரன்கள் எடுத்துள்ளார்.
ஷகிப் அல் ஹசன்
வங்கதேச அணியின் கேப்டனாகவும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தவர் ஷகிப் அல் ஹசன். இவர் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து இந்தாண்டுடன் ஓய்வை அறிவித்தார்.
71 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 31 அரைசதங்களுடன் 4,609 ரன்கள் குவித்துள்ளார். 246 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 19 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள வங்கதேச வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
247 ஒருநாள் போட்டிகளில் 7,570 ரன்கள், 317 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 125 டி20 போட்டிகளில் 2,515 ரன்கள், 146 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.