
அமெரிக்காவில் உலகக் கோப்பை தொடரை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 167 கோடி) இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இன்று (ஜூலை 19) நடைபெறவுள்ள ஐசிசியின் வருடாந்திர மாநாட்டுக்கு முன்னதாக இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. நியூயார்க்கில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி உள்பட போட்டியின் கணிசமான பகுதியை அமெரிக்காவில் நடத்த ஐசிசி எடுத்த முடிவு எதிர்பார்த்த நிதி வருவாயை அளிக்கவில்லை.
அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலமாக்கும் நோக்கில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போதே கிரிக்கெட் ரசிகர்களால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
அதிலும், மோசமான ஆடுகளங்கள், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போட்டி நடைபெற்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
ஐபிஎல் போட்டிகளில் 20 ஓவர்களில் 287 ரன்களை குவித்த உற்சாகத்தில் உலகக் கோப்பை தொடரை பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட செயற்கைப் புற்கள் மூலம், நியூயார்க்கில் 3 மாதங்களில் அவசர, அவசரமாக கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில், விறுவிறுப்பான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் 120 ரன்களைகூட எட்ட முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பந்து வீச்சாளர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்த நியூயார்க் மைதானத்தில் பெரும்பாலான போட்டிகள் நடத்தப்பட்டன. மோசமான பிட்ச்சால் பந்துகள் சீரில்லாமல் எழும்பின. குறைவான ஸ்கோர்கள் கொண்டப் போட்டிகள், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் அதிகாலை, இரவு என்று முறையில்லாமல் நடத்தப்பட்ட போட்டிகள் என ரசிகர்கள் ஐசிசி மீதி மிகுந்த கோபமடைந்தனர்.
உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு அமெரிக்க ஆடுகளம் மோசமான ஆடுகளமாக அறிவிக்கப்பட்டது.
எதிர்பார்த்ததைவிட குறைவான டிக்கெட் விற்பனை மற்றும் அமெரிக்காவில் அதிக செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது (ஏஜிஎம்) விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய தலைப்புகளில் ஒன்றாக, கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக புதிய ஐசிசி தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமனமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.