
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது குறித்து இந்திய வீரர் அக்ஷர் படேல் மனம் திறந்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அக்ஷர் படேல் 5-வது வீரராக களமிறங்கி விராட் கோலியுடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி சவாலான ஸ்கோரை எடுக்க உதவினார். விராட் கோலி மற்றும் அக்ஷர் படேல் இருவரும் இணைந்து 72 ரன்கள் எடுத்தனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது குறித்து அக்ஷர் படேல் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும்போது, ரோஹித் சர்மா எனது அருகில்தான் நின்று கொண்டிருந்தார். என்னை பேடினைக் கட்டித் தயாராக இருக்குமாறு அவர் கூறினார். அப்போது யுஸ்வேந்திர சஹால் என்னிடம் வந்து ராகுல் டிராவிட் என்னை பேடினைக் கட்டித் தயாராக இருக்குமாறு கூறியதாகக் கூறினார். நான் பேடினைக் கட்டி களமிறங்க தயாராக இருந்தேன். ஆனால், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை. மூன்றாவது விக்கெட்டாக சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். அதிகம் யோசிப்பதற்கு நேரமில்லை. களமிறங்க சென்றபோது, எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என ஹார்திக் பாண்டியா கூறினார்.
நான் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தது நம்பிக்கை கொடுத்தது. விராட் கோலி தொடர்ந்து என்னை வழிநடத்தினார். உன்னால் அடிக்க முடியும் எனத் தோன்றினால் கண்டிப்பாக அந்த மாதிரியான பந்துகளைப் பயன்படுத்திக்கொள் என்றார். அவர் தொடர்ந்து என்னிடம் பேசியது நம்பிக்கையுடன் விளையாட உதவியாக இருந்தது என்றார்.
இறுதிப்போட்டியில் அக்ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.