
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 21) நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் அதிரடியாக 29 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் கவிஷா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சமைரா மற்றும் ஹாட்சந்தனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கவிஷா ஈகோடேஜ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஈஷா ரோஹித் 38 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஐக்கிய அரபு அமீரகம் 123 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரேனுகா சிங், தனுஜா கன்வர், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிச்சா கோஷ் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். முன்னதாக, நேற்று முன் தினம் (ஜூலை 19) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.