
இங்கிலாந்து மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ச்சியாக 8-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இளம் வீரர் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியிலும் 241 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கடைசி 8 முறையும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. அந்த அணி இங்கிலாந்து மண்ணில் கடைசியாக கடந்த 1988 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.