இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 72 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இதையும் படிக்க: பும்ரா அசத்தல்: முதல்முறையாக கோல்டன் டக் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
72 ஆண்டுகளுக்குப் பிறகு...
பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும், இந்திய அணி 7 விக்கெட்டுகளையும் இன்று (நவம்பர் 22) ஒரே நாளில் கைப்பற்றியது. இந்த 17 விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, பெர்த் மைதானத்தில் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.