உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மீண்டும் முதலிடம்
நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு சறுக்கியது.
இந்த நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி 61.11 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 57.69 சதவிகித வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும், 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உள்ளன.