சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் அதிரடியாக சதமடித்து குஜராத் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரரான உர்வில் பட்டேல் அதிவேகமாக சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
குஜராத் - திரிபுரா மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீதாம் பால் 57 ரன்கள் எடுத்தார். அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்யா தேசாய் - விக்கெட் கீப்பர் உர்வில் பட்டேல் இருவரும் சேர்ந்து திரிபுரா வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவர்களில் 150 ரன்கள் சேர்த்த நிலையில் ஆர்யா 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 38 பந்துகளில் விக்கெட்டை இழக்க உர்வில் பட்டேல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 35 பந்துகளில் 113* ரன்கள் ( 7 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள்) விளாசினார்.
குஜராத் அணி 10.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.
26 வயதான உர்வில் பட்டேல் வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் வியக்கவைத்தார். முதல் தரப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர், சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிமாசல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் சதமடித்திருந்தார். உர்வில்லுக்கு முன்னதாக எஸ்டோனியா வீரர் சாஹில் சௌகான் 27 பந்துகளில் சதமடித்தது சாதனையாக தொடர்கிறது.
கடந்த ஆண்டு குஜராத் டைடன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த உர்வில் பட்டேலுக்கு ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் இருந்த இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
இதுவரை 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள உர்வில் பட்டேல் 1 சதம், 4 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த ஆண்டில் விஜய் ஹசாரே தொடரில் சத்தீஸ்கரில் நடைபெற்ற ஆட்டத்தில் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.