நானும் தில்லி கேபிடல்ஸும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஒன்றிணைந்து வெல்வோம்: கே.எல்.ராகுல்

ஐபிஎல் கோப்பையை தானும், தில்லி கேபிடல்ஸும் ஒன்றிணைந்து வெல்வோம் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் (கோப்புப் படம்)
கே.எல்.ராகுல் (கோப்புப் படம்)படம் | பிசிசிஐ
Published on
Updated on
2 min read

ஐபிஎல் கோப்பையை தானும், தில்லி கேபிடல்ஸும் ஒன்றிணைந்து வெல்வோம் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அண்மையில் நிறைவடைந்தது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கே.எல்.ராகுல், தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்த நான்கு அணிகளுடன் இணைந்து விளையாடியபோதிலும், கே.எல்.ராகுல் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த நிலையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவர் தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் கே.எல்.ராகுல் மிகச் சிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரில் நடுவரிசை ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், பின் நாள்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு இடைவெளிகளில் கே.எல்.ராகுல் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்தார். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி அசத்தினார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார். அந்த தொடரில் அவர் 670 ரன்கள் குவித்தார்.

கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் முதன் முதலாக அவரது கேப்டன்சி பயணம் தொடங்கியது. அவர் அந்த ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன் பின், லக்னௌ அணியின் கேப்டனாக அந்த அணியை அறிமுக சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுவரை அழைத்துச் சென்றார்.

இந்த ஆண்டு மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் கே.எல்.ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது, அந்த அணியின் தைரியமான மற்றும் தீர்க்கமான முடிவாக பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுலின் ரன்கள் குவிக்கும் திறன் மற்றும் அவரது தலைமைப் பண்பு என இரண்டும் தில்லி கேபிடல்ஸுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரில் முதல் கோப்பைக்கானத் தேடலில் இருக்கும் தில்லி கேபிடல்ஸுக்கு கே.எல்.ராகுலின் வரவு மிகவும் பலம் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் தில்லி கேபிடல்ஸ் இருவரும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இருவரும் ஒன்றிணைந்து ஐபிஎல் கோப்பைக்கானத் தேடலில் இந்த சீசனில் பயணிக்க உள்ளனர்.

இது தொடர்பாக கே.எல்.ராகுல் கூறியிருப்பதை தில்லி அணி நிர்வாகம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது: நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. தில்லி கேபிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com