வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்படம் | பிசிசிஐ

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
Published on

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்காக இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தில்லிக்கு எதிராக 152 ரன்கள் குவித்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக மீதமுள்ள போட்டிகளுக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி காபாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததில் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பும் அடங்கும். அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார். இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது அவருக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது: நியூசிலாந்துக்கு எதிராக புணேவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி புணேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com