
மழை காரணமாக ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறாதது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இரு அணிகளின் பயிற்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் போட்டி நடத்தப்படாமல் கைவிடப்பட்டது.
போட்டியின் கடைசி நாளான இன்றும் மழை காரணத்தால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால், ஒரு பந்து கூட வீசப்படாமல் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது.
பயிற்சியாளர்கள் ஏமாற்றம்
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வமாக இருந்தோம். துரதிருஷ்டவசமாக, வானிலை காரணமாக போட்டி நடைபெறவில்லை. மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது என்றார்.
நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: போட்டி நடைபெறாதது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து விளையாடவிருந்த முதல் டெஸ்ட் போட்டி. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆப்கானிஸ்தான் மிகவும் சவாலான அணி. கடந்த சில உலகக் கோப்பைகளாக அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி இலங்கை செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.