கேப்டன் மாறினால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்களா? முன்னாள் பாக். வீரர் கேள்வி!

பாகிஸ்தான் அணியின் கேப்டனை மாற்றினால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்களா என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கேள்வி.
கேப்டன் மாறினால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்களா? முன்னாள் பாக். வீரர் கேள்வி!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
2 min read

பாகிஸ்தான் அணியின் கேப்டனை மாற்றினால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்களா என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் குழப்பம்

பாகிஸ்தான் அணி அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. பாகிஸ்தான் அணியில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில் டெஸ்ட் தொடரை இழந்தது அந்த அணியின் மீதான விமர்சனங்களை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்த குழப்பங்களுக்கு இடையே அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறவுள்ளது. வெள்ளைப் பந்து போட்டிகளில் இருந்து பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற செய்திகளும் ஊடகங்களில் வருகின்றன.

கேப்டன்சியை மாற்ற நினைக்க காரணம் என்ன?

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற முக்கியமான தொடர்களில் சரிவர செயல்பட தவறி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. ஆசிய கோப்பை தோல்வி, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் தோல்வி என பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருப்பதால், கேப்டன்சியில் மாற்றம் கொண்டுவர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைப்பதாக கூறப்படுகிறது.

கேப்டன்சியை மாற்றினால் சரியாகிவிடுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டன் பதவியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுப்பதால் நிலைமை சரியாகிவிடுமா எனவும், கேப்டன்சி மாறுவதால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்களா என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் தோல்வியடைந்த போதெல்லாம் கேப்டன்சி மாற்றத்தைக் கொண்டுவர நினைக்காதவர்கள், தற்போது கேப்டன்சியில் மாற்றம் கொண்டுவர நினைப்பது ஏன்? கேப்டன்சியில் மாற்றம் கொண்டு வந்து என்ன மாறிவிடப் போகிறது. புதிய கேப்டன் பாகிஸ்தான் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் அல்லது மிட்செல் ஸ்டார்க்கை கொண்டு வந்து அணியை சிறப்பாக மாற்றிவிடுவார்கள் என நினைக்கிறீர்களா?

வீரர்கள் தங்களது அடிப்படையான ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்தாத வரையில், தோல்விகளை தவிர்க்க முடியாது. கேப்டனை மாற்றிப் பயனில்லை. கேப்டன், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் என அனைவரும் சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.