
ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை இலங்கையின் துனித் வெல்லாலகே மற்றும் ஹர்ஷிதா சமரவிக்கிரம வென்று அசத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக துனித் வெல்லாலகேவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்கிரம அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம், ஆகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக அவர் தேர்வாகியுள்ளார்.
இரண்டாவது முறை
ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனை ஒரே மாதத்தில் ஐசிசி விருதினை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் இந்த ஆண்டின் ஜூன் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை வென்றிருந்தனர்.
ஐந்தாவது வீரர்
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வெல்லும் ஐந்தாவது இலங்கை வீரராக துனித் வெல்லாலகே மாறியுள்ளார். இதற்கு முன்னதாக, ஏஞ்சலோ மேத்யூஸ் (மே 2022), பிரபாத் ஜெயசூர்யா (ஜூலை 2022), வனிந்து ஹசரங்கா (ஜூன் 2023) மற்றும் கமிந்து மெண்டிஸ் (மார்ச் 2024) ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான விருதினை வென்றுள்ளனர்.
இரண்டாவது வீராங்கனை
ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வெல்லும் இரண்டாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமை ஹர்ஷிதா சமரவிக்கிரமவையேச் சேரும். அவருக்கு முன்பாக, இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு இந்த ஆண்டில் இரண்டு முறை (மே மற்றும் ஜூலை) சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளார்.
விருது வென்றது குறித்து...
துனித் வெல்லாலகே
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருது எனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்துள்ளது. இந்த விருது நான் மேலும் நன்றாக செயல்பட ஊக்கமளிப்பதாக இருக்கும். என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு இதுபோன்ற விருதுகள் மிகுந்த ஊக்கமளிக்கும்.
ஹர்ஷிதா சமரவிக்கிரம
ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. எனது கிரிக்கெட் பயணத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த விருதானது எனது தன்னம்பிக்கையை அதிகரித்து என்னை சிறப்பாக செயல்பட வைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.