சவாலான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம்: வங்கதேச கேப்டன்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கப் போவதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த வங்கதேசம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சவாலை சந்திக்கத் தயாராகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், வங்கதேச அணி இன்று (செப்டம்பர் 15) பிற்பகல் சென்னை வந்தடைந்தது.
சென்னைக்கு வந்தடையும் முன்பாக டாக்கா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கண்டிப்பாக எங்களுக்கு மிகுந்த சவாலானதாக இருக்கப் போகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தொடரும் எங்களுக்கான வாய்ப்பாகும். இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் விளையாடுவோம். எங்களது வேலையை சரியாக செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றார்.