
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த விக்ரம் ரத்தோர், அடுத்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
55 வயதாகும் விக்ரம் ரத்தோர், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியை வழிநடத்தியபோது, அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். அவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
விக்ரம் ரத்தோரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்து ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராஜஸ்தான் அணி விக்ரம் ரத்தோரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான தேர்வு
விக்ரம் ரத்தோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ள முடிவு மிகவும் சரியானது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பல ஆண்டுகளாக விக்ரம் ரத்தோருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்திய ஆடுகளங்கள் குறித்த அவரது ஆழமான புரிதல் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தேர்வுக்கான சரியான நபராக மாற்றியுள்ளது. அவரது அனுபவம் கண்டிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உதவியாக இருக்கும் என்றார்.
விக்ரம் ரத்தோர் பேசியது...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து விக்ரம் ரத்தோர் பேசியது: ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தில் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து பணியாற்றவுள்ளதை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அணிக்கு எனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன் என்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட விக்ரம் ரத்தோர், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களின் பேட்டிங் திறனை மேம்படுத்த பெரிதும் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.