
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஷகிப் அல் ஹசன் விக்கெட் ஏதும் எடுக்காத நிலையில், அவருக்கு ஆதரவாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேசியுள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட்டில் வெற்றி
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
விக்கெட் எடுக்கவில்லை
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அவரது டெஸ்ட் பயணத்தில் குறைந்தது 20 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் இருப்பது இது 5-வது முறையாகும். அதேபோல அவரது ஓவரில் அதிக ரன்களும் எடுக்கப்பட்டன. முதல் டெஸ்ட் போட்டியில் 21 ஓவர்கள் வீசிய ஷகிப் அல் ஹசன் 129 ரன்களை வாரி வழங்கினார்.
கேப்டன் ஆதரவு
மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் விக்கெட் ஏதும் எடுக்காமல் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தபோதிலும், வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: ஷகிப் அல் ஹசன் குறித்த கேள்வி மிகவும் துணிச்சலான கேள்வி. அணியின் கேப்டனாக ஒவ்வொரு வீரரும் போட்டிக்காக எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை பார்க்கிறேன். ஷகிப் அல் ஹசன் ஃபார்முக்குத் திரும்புவதற்காக அவரால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க எந்த அளவுக்கு அவர் உழைக்கிறார் என்பதையே நான் பார்ப்பேன். அணியில் உள்ள அனைவரும் தங்களது கடின உழைப்பைக் கொடுக்கிறார்கள். அவர்களை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.