வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியது குறித்து ரிஷப் பந்த் மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கார் விபத்துக்குப் பிறகு முதல் டெஸ்ட்
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கினார். கார் விபத்தில் காயமடைந்த அவர் ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடமல் இருந்து இந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கார் விபத்துக்குப் பிறகு, ரிஷப் பந்த் விளையாடிய முதல் டெஸ்ட் ஆகும். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 39 ரன்கள் மற்றும் 109 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையையும் ரிஷப் பந்த் சமன் செய்தார். இருவரும் டெஸ்ட் போட்டிகளில் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.
மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்
கார் விபத்துக்குப் பிறகு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசிய ரிஷப் பந்த், தனக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வங்கதேசத்துக்கு எதிரான இந்த சதமானது எனக்கு மிகவும் சிறப்பானது. ஏனெனில், எனக்கு சென்னையில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். காயத்திலிருந்து குணமடைந்த பிறகு, மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விரும்பினேன். காயத்திலிருந்து மீண்ட பிறகு நான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
ஒவ்வொரு நாளும் சிறப்பாக மாறி வருகிறேன் என நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்ட வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே மிகவும் பிடிக்கும் என்றார்.