அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ளது.
பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்
அனைத்து வடிவிலான போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக புதிய பந்தில் அல்லது சிறிது பழைய பந்தில் அல்லது பழைய பந்தில் விளையாடினாலும் அற்புதமாக பந்துவீசக் கூடியவர். புதிய பந்து, பழைய பந்து என இல்லாமல் அனைத்திலும் அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் எனக் கூறும் அளவுக்கு சிறப்பான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக பேட் செய்வது எப்போதுமே சவாலானதாக இருக்கப் போகிறது என்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து 37 போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா 164 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.