இயல்பாகவே தனக்கு பேட்டிங் செய்ய வருவதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
ஆட்டநாயகன் அஸ்வின்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ரவீந்திர ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அசத்திய அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக அமைந்தார்.
முதலில் பந்துவீச்சாளர், இயல்பாகவே பேட்ஸ்மேன்
முதலில் தான் ஒரு பந்துவீச்சாளர் எனவும், தனக்கு இயல்பாகவே பேட்டிங் செய்ய வருவதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நான் ஒரு பந்துவீச்சாளராகவே அறியப்படுகிறேன். அதனால், பந்துவீச்சை முதலில் வைத்து பார்க்கிறேன். இயல்பாகவே எனக்கு பேட்டிங் செய்ய வருகிறது. ஆனால், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதற்கு கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு முறை சென்னையில் விளையாடும் போதும், அது அற்புதமான உணர்வை கொடுக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நிறைய டெஸ்ட் போட்டிகளை பார்த்துள்ளேன். அதே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.