
ஷுப்மன் கில்லுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய காரணம் என்ன என்பது குறித்து ரிஷப் பந்த் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
167 ரன்கள் பார்னர்ஷிப்
வங்கதேசத்துக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் 39 ரன்களும், ஷுப்மன் கில் 0 ரன்னும் எடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் 109 ரன்களும், ஷுப்மன் கில் 119* ரன்களும் எடுத்தனர். அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 167 ரன்கள் எடுத்தனர். அந்த ரன்கள் இந்திய அணி நல்ல முன்னிலையைப் பெற காரணமாக அமைந்தது.
சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய காரணம் என்ன?
ஷுப்மன் கில்லுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய காரணம் என்ன என்பது குறித்து ரிஷப் பந்த் பேசியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட விடியோவில் அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு வெளியே ஒருவருடன் நல்ல நட்புறவு இருக்கும்போது, அவருடன் பேட்டிங் செய்வது எளிது. நானும் ஷுப்மன் கில்லும் ஆடுகளத்துக்கு வெளியே மிகவும் வேடிக்கையாக பேசிக் கொள்வோம். போட்டி குறித்து நிறைய பேசுவோம். எங்கள் இருவருக்கும் போட்டியின்போது என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாக தெரிந்திருந்தது. அவருடனான நட்பு அவருடன் பார்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடுவதற்கு உதவியது.
பதற்றமாக இருந்தேன்
கார் விபத்துக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடியது குறித்துப் பேசிய ரிஷப் பந்த், பேட்டிங் செய்யும்போது மிகவும் பதற்றமாக இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இறுதியாக, சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது என்றார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.