பள்ளி மாணவர் ஒருவர் ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
பள்ளி கிரிக்கெட்
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஷிவாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற திவான் பல்லுபாய் கோப்பை 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) அணிக்காக ஜே.எல். ஆங்கிலப் பள்ளிக்கு எதிராக 498 ரன்கள் விளாசியதன் மூலம் 18 வயதான துரோணா தேசாய் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கீழ் வரும் அகமதாபாத் கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. துரோணா தேசாய் 498 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அளவில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த ஆறாவது வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
சாதனை பட்டியல்
இதற்கு முன்னதாக மும்பையைச் சேர்ந்த பிரணவ் தனவாடே (1009*), இந்திய அணி வீரர் பிரித்வி ஷா (546), ஹவேவாலா (515), சமன்லால் (506 நாட் அவுட்), அர்மான் ஜாபர் (498) ஆகியோர் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.
அதிக ரன்கள் அடித்தது குறித்து பள்ளி மாணவர் துரோணா தேசாய் கூறுகையில், “நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, மைதானத்தில் ஸ்கோர்போர்டு எதுவும் இல்லை. நான் 498 ரன்களில் பேட்டிங் செய்கிறேன் என்று எனது அணியினரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்து விக்கெட்டை இழந்து விட்டேன். ஆனால், நான் அந்த ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
இன்னிங்ஸ் வெற்றி
துரோணா தேசாய் 320 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள் மற்றும் 86 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் விளாசியுள்ளார். ஜே.எல் ஆங்கிலப் பள்ளிக்கு எதிராக தேசாயின் அணி இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேசாய் 14 வயதுக்குள்பட்ட குஜராத் அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் அவர் 19 வயதுக்குள்பட்ட அணியில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கைப் பார்த்த பிறகு தனக்கு உத்வேகம் கிடைத்தாகவும் தெரிவித்துள்ளார் துரோணா தேசாய்.