
புஜாரா இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பு என இந்திய அணியின் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு முறை கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பு
கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போதும், புஜாரா சிறப்பாக செயல்பட்டார் எனவும், அவர் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பு எனவும் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் புஜாரா இந்திய அணியில் பெரிதும் மிஸ் செய்யப்படுவார். பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணியில், புஜாரா பேட்டிங்கின் முதுகெலும்பாக இருந்தார். அணிக்காக நீண்ட நேரம் களத்தில் நிலைத்து ஆடி புதிய பந்தில் அவர் ரன்கள் குவித்தார். புதிய பந்தில் அவர் நீண்ட நேரம் விளையாடியதால் அவருக்குப் பின் களமிறங்கிய வீரர்களுக்கு பேட் செய்வது எளிதானது.
இரண்டு முறை சுற்றுப்பயணத்தின்போதும் புஜாரா இந்திய அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கினார். அவரது இடத்தை இந்த முறை யார் நிரப்புவார் என்பது எனக்கு கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுபவர்களாக உள்ளனர். அனைவரும் அவர்களுக்கு பிடித்தமான ஷாட்டுகளை விளையாடுகிறார்கள். விராட் கோலி ஒருவர் மட்டுமே மற்ற பேட்ஸ்மேன்களுடன் இணைந்து நீண்ட நேரம் விளையாடுவார் என நினைக்கிறேன். அவர் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து ஆடுவார் என நினைக்கிறேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எவ்வளவு நேரம் களத்தில் தாக்குப் பிடித்து விளையாடுகிறோம் என்பது முக்கியம்.
கே.எல்.ராகுல் 6-வது வீரராக களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் வெளிநாடுகளில் உள்ள ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் உள்ளவர். அவரால் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து ஆட முடியும். ஆஸ்திரேலியாவில் 6-வது வீரராக களமிறங்கி விளையாடுவது என்பது மிகவும் முக்கியமான பொறுப்பு. 6-வது வீரராக களமிறங்குபவர் இரண்டாவது புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தால் சீக்கிரமாக களமிறங்க நேரிடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜெய்ஸ்வாலின் திறமையை சோதிக்கும் டெஸ்ட் தொடராக இருக்கப் போகிறது. ஆனால், அவர் மிகவும் நம்பிக்கையான வீரர். ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் சந்திக்க மனதளவில் அவர் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.