இலங்கை அணியின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து; பிரபாத் ஜெயசூர்யா அபார பந்துவீச்சு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பிரபாத் ஜெயசூர்யா
பிரபாத் ஜெயசூர்யா படம் | AP
Published on
Updated on
2 min read

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் காலேவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் 182* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் 116 ரன்களும், குசல் மெண்டிஸ் 106* ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ரன்களும் குவித்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் 0 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

சுழலில் சுருண்ட நியூசிலாந்து

ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (செப்டம்பர் 28) நியூசிலாந்து அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேன் வில்லியம்சன் 7 ரன்களிலும், அஜாஸ் படேல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், நியூசிலாந்து வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக சுழற்பந்துவீச்சாளர்களான பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷான் பெய்ரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ரச்சின் ரவீந்திரா (10 ரன்கள்), டேரில் மிட்செல் (13 ரன்கள்), டாம் பிளண்டெல் (1 ரன்), கிளன் பிளிப்ஸ் (0 ரன்), டிம் சௌதி (2 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிட்செல் சாண்ட்னர் மட்டும் ஓரளவுக்கு நிதானமாக விளையாடி 29 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.

பிரபாத் ஜெயசூர்யா
பிரபாத் ஜெயசூர்யா படம் | AP

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும், அஷிதா ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஃபாலோ ஆன்

ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், டெவான் கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. டெவான் கான்வே 62 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து தனஞ்ஜெயா டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேன் வில்லியம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் களம் கண்ட ரச்சின் ரவீந்திரா 12 ரன்களிலும், டேரில் மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பிளண்டெல் 47 ரன்களுடனும், கிளன் பிளிப்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி இலங்கையைக் காட்டிலும் 315 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.