
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
53 வயதாகும் கேரி ஸ்டெட் தலைமையிலான நியூசிலாந்து அணி பல்வேறு உயரங்களை எட்டியுள்ளது. ஐசிசி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி என இவரது தலைமையின் கீழ் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் எடிசனில் கோப்பையை வென்று அசத்தியது.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேரி ஸ்டெட் பேசியதாவது: பயிற்சியாளராக ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனது எதிர்காலம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் அனுபவம் குறைந்த நியூசிலாந்து அணியை வைத்து சிறப்பாக செயல்படுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டேன்.
இதையும் படிக்க: முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு!
கடந்த 6-7 மாதங்கள் மிகவும் பிஸியாக இருந்தது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும். பயிற்சியாளராக என்னால் தொடர்ந்து செயல்பட முடியும் என நினைக்கிறேன். ஆனால், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்றார்.
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களின்றி விளையாடிய நியூசிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.