
ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங் செய்ய வந்திருப்பேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற பரபரப்பான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
100 ரன்கள் தேவை என்றாலும்...
ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. காயம் காரணமாக களமிறங்குவாரா? மாட்டாரா? எனத் தெரியாமல் இருந்த கிறிஸ் வோக்ஸின் விக்கெட்டினையும் சேர்த்து இங்கிலாந்து அணியிடம் கைவசம் 4 விக்கெட்டுகள் மீதமிருந்தன.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, ரசிகர்களின் மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் களம் கண்டார் கிறிஸ் வோக்ஸ். பந்தினை எதிர்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காவிட்டாலும், அணிக்காக தைரியமாக களமிறங்கினார். இறுதியில், இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்காக பேட்டிங் செய்வது தனது கடமை எனவும், அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் பேட்டிங் செய்ய வந்திருப்பேன் எனவும் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இதனை எப்படி கூறுவதென்று தெரியவில்லை. மிகப் பெரிய விஷயத்தில் அங்கம் வகிக்கப் போவதாக உணர்ந்தேன். அணியில் உள்ள வீரர்கள் கடுமையாக போராடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து வந்தனர். மக்கள் பலரும் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடலில் நேரில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை பார்த்து வருகின்றனர்.
அணிக்காக களமிறங்குவது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். காயத்துடன் களமிறங்குவது கடினமாக இருந்தது. ஆனால், களமிறங்கமால் இருந்துவிடலாம் என ஒருபோதும் நினைக்கவில்லை. வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்திருந்தாலும், அணிக்காக பேட்டிங் செய்ய வந்திருப்பேன். எனக்காக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சிறப்பான உணர்வைத் தந்தது. இந்திய வீரர்கள் சிலர் என்னிடம் வந்து என்னைப் பாராட்டினார்கள். என்னுடைய இடத்தில் எந்த ஒரு வீரர் இருந்திருந்தாலும், அணிக்காக அவர் கண்டிப்பாக பேட்டிங் செய்ய வந்திருப்பார் என்றார்.
ஓவல் டெஸ்ட் போட்டிக்காக ஆட்டத்தின் நான்காம் நாளிலிருந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரஸ்கோத்திக்குடன் இணைந்து ஒற்றைக் கையில் பேட்டிங் செய்ய பயிற்சி மேற்கொண்டதாக கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.