
ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பார். அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார்.
அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தினார். மேலும், கொல்கத்தா அணியில் இருந்து விலகி நிகழாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி அவரை ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல்லிலும் அதிரடியைத் தொடர்ந்த ஷ்ரேயஸ், 604 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.
அதுமட்டுமின்றி அவர் சையத் முஸ்டாக் அலி, ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை என அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் அசத்தினார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் கலட்டிவிடப்பட்டு, அதற்கு முழுமையான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலும் ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் மறுத்து வந்தது.
ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், சாம்பியன் டிராபியில் தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், 5 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 243 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரிலும், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10 முதல் 14 வரை தில்லியின் அருண் ஜேட்லி மைதானத்திலும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.