
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 49 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் எவின் லீவிஸ் அதிகபட்சமாக 62 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 55 ரன்களும், ராஸ்டன் சேஸ் 53 ரன்களும் எடுத்தனர். கீஸி கார்ட்டி 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், சைம் ஆயுப், சூஃபியான் முக்யும் மற்றும் சல்மான் அகா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அறிமுக வீரர் ஹாசன் நவாஸ் அசத்தல்
281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது..
பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹாசன் நவாஸ் அதிகபட்சமாக 54 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் முகமது ரிஸ்வான் 53 ரன்களும், பாபர் அசாம் 47 ரன்களும் எடுத்தனர். ஹுசைன் டாலட் 37 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேடன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரரான ஹாசன் நவாஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.