
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயாராக இருப்பதாக மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மார்னஸ் லபுஷேன், அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. டெஸ்ட் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் லபுஷேன் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வருகிற நவம்பரில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் லபுஷேன் இடம்பெறாத நிலையில், ஆஷஸ் தொடரில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார்
ஆஷஸ் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் எனவும், ஆஷஸ் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயாராக இருப்பதாகவும் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பெறாதது என்னை பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளின் அழுத்தத்தில் இருந்து விலகியிருக்க வாய்ப்பளித்தது. ஊடகங்களின் விமர்சனங்களும் போட்டியின் ஒரு பகுதியாக உள்ளது. அதை தவறாகக் கூறவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறாதது என்மீது சந்தேகப்பட்டவர்களுக்கு அவர்கள் நினைப்பது தவறு என நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயாராக இருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் 3-வது வீரராகவே களமிறங்கி விளையாடியுள்ளேன். ஆனால், இந்த மாதிரியான சூழலில் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக இருக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நன்றாக விளையாடியதாகவே உணர்கிறேன் என்றார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்னஸ் லபுஷேன், முதல் இன்னிங்ஸில் 17 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.