
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இந்தத் தொடரை பாகிஸ்தான் வெற்றியுடன் தொடங்கிய நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதால், இந்தத் தொடர் சமனில் இருந்தது.
இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி டிரினிடாட்டில் பிரையன் லாரா திடலில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, பிரண்டன் கிங் 5 ரன்களும், லிவீஸ் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்களும், கீஸி கார்டி 17 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், கேப்டன் ஷாய் ஹோப் நிதானமாகவும், அதிரடியாகவும் நங்கூரம் பாய்ச்சியதுபோல் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரோஸ்டன் சேஸ் 36 ரன்களிலும், மோட்டி 5 ரன்களிலும், ஷெர்ஃபைன் ரூதர்போர்டு 15 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர்.
ஷாய் ஹோப்க்கு ஜஸ்டின் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். 94 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்து ஷாய் ஹோப் கடைசிவரை களத்தில் இருந்தார். ஜஸ்டின் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணித் தரப்பில் நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமது இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை ஜேடன் சீல்ஸ் பதம்பார்த்தார்.
அவரின் வேகத்தில் தாக்குப் பிடிக்கமுடியாமல் சைம் அயூப், அப்துல்லா இருவரும் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேற, பாபர் அசாம் 9 ரன்களிலும், கேப்டன் ரிஸ்வார் கோல்டன் டக் ஆகி சீல்ஸ் வீசிய வலையில் சிக்கினர்.
சல்மான் அலி அகா மட்டும் தாக்குப்பிடித்து 30 ரன்கள் எடுத்தார். நவாஸ் 23 ரன்கள் எடுத்தார். நசீம் ஷா 6 ரன்களிலும், ஹசன் அலில் அப்ரார் அகமதும் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி, சீல்ஸிடமே சிக்கினர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 7.2 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 1991 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றிருந்த நிலையில், 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடரை வென்று அசத்தியுள்ளது.
120 ரன்கள் விளாசிய ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதையும், ஜேடன் சீல்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.