
ஹர்பஜன் சிங்கிடம் பேச மறுத்த தனது மகள் குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் ஐபிஎல் போட்டியின்போது மோதிக்கொண்டார்கள்.
மும்பை அணிக்காக ஹர்பஜனும் பஞ்சாப் அணிக்காக ஸ்ரீசாந்தும் விளையாடினார்கள்.
ஐபிஎல் 2008-இல் ஒரு போட்டியின்போது ஹர்பஜன் சிங் கோபத்தில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்துவிடுவார்.
இதற்காக ஹர்பஜன் சிங் 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடைசெய்யப்பட்டார்.
வருந்திய ஹர்பஜன் சிங்...
பின்னர், ஓர் நாளில் ஸ்ரீசாந்த்தின் மகளிடம் ஹர்பஜன் ஆசையாகப் பேச முயன்றபோது அந்தச் சிறுமி, “உங்களிடம் பேச முடியாது. நீங்கள் என் தந்தையை அடித்தவர்” எனக் கூறினார்.
இதனால் மனமுடைந்த ஹர்பஜன் அஸ்வின் நேர்காணலில் மிகவும் வருத்தமாகப் பேசினார். தன் வாழ்வில் அந்த ஒரு பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டுமெனக் கூறினார்.
சூதாட்ட புகாரிலிருந்து வெளிவந்த ஸ்ரீசாந்த் உள்ளூர் போட்டிகளில் கம்பேக் அளித்தாலும் ஐபிஎல் அல்லது தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஹர்பஜன் சிங் தான் செய்த தவறுக்காக பலமுறை மன்னிப்பு கேட்டும் தன் மகள் இப்படி நடந்துகொண்டது குறித்து ஸ்ரீசாந்த் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:
மகளுக்குப் புரிய வைக்க முயன்றோம்...
’இதுதான் பாஜி பா, இவர் என்னுடம் விளையாடி இருக்கிறார்’ என ஒருமுறை எனது மகளை ஹர்பஜனிடம் அறிமுகம் செய்தேன். எனது மகள் அவரிடம் நேரடியாகவே பேச முடியாது எனக் கூறிவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
பள்ளிக்கூடங்களில் இது குறித்து பலவிதமாகப் பேசியிருக்கிறார்கள் போலிருக்கிறது. நாங்கள் எவ்வளவோ புரிய வைக்க முயன்றும் அவள் மறுத்துவிட்டாள்.
அடுத்த நால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டின்போது நாங்கள் அவளுக்கு அவர் என் அண்ணன் மாதிரி எனப் புரிய வைத்தோம்.
ஹர்பஜன் வேண்டுமென்றே அதைச் செய்தார் என நினைக்கவில்லை. ஆட்டத்தின் போக்கில் அது நடந்து விட்டது. இது எங்கள் இருவருக்கும் ஒரு கற்றல் அனுபவம்தான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.