

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (டிசம்பர் 4) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பென் டக்கெட் மற்றும் ஆலி போப் இருவரும் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின், ஸாக் கிராலி மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அற்புதமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸாக் கிராலி அரைசதமும், ஜோ ரூட் சதமும் விளாசி அசத்தினர்.
ஸாக் கிராலி 93 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 202 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய 40-வது சதமாகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 30 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜோ ரூட் முதல் முறையாக சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாரி ப்ரூக் 31 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வில் ஜாக்ஸ் தலா 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஸ்காட் போலாண்ட் மற்றும் மைக்கேல் நெசர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.