

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளதாக வங்கதேச அணியின் இளம் வீரர் தன்சித் ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் டி20 தொடர் தொடங்குவதால், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக வங்கதேச அணியின் இளம் வீரர் தன்சித் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது முதல் தற்போது வரை, என்னுடைய முழுத் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, ஐசிசி நடத்தும் தொடர்களில் இன்னும் என்னுடைய முழுத் திறனுடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சித்து வருகிறேன்.
இதற்கு முன்பாக விளையாடிய போட்டிகளில் நான் நன்றாக ரன்கள் எடுத்தக் தொடங்கி அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாததை பார்த்திருப்பீர்கள். இனிவரும் போட்டிகளில் எனக்கு கிடைக்கும் சிறப்பான தொடக்கத்தைப் பயன்படுத்தி பெரிய ஸ்கோரை எடுக்க மனதளவில் தயாராகி விட்டேன். பவர்பிளேவில் வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் கவனம் பயிற்சியாளர்கள் செலுத்தி வருகின்றனர்.
சில நேரங்களில் அதிரடியாக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற தேவையில்லாதபோது, அதிக ரிஸ்க்கான ஷாட்டுகளை விளையாடி ஆட்டத்தில் சீக்கிரமாக இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்துவிடுகிறோம். அதனால், குறைவான ரிஸ்க்கில் எப்படி ரன்கள் குவிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் களமிறங்குவேன் என்று ஒன்றும் கிடையாது. அணியின் நலனுக்கு என்ன தேவையோ அதற்கேற்ப விளையாட தயாராக இருக்கிறேன் என்றார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நேபாளம் மற்றும் இத்தாலி அணிகளுடன் வங்கதேசம் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. வங்கதேசம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.