

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி கட்டாக்கில் இன்று (டிசம்பர் 9) நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணிக்காக டாப் ஆர்டரில் விளையாடும்போது சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவர் டாப் ஆர்டரில் களமிறக்கப்படுவதே சிறந்த முடிவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது. ஷுப்மன் கில் அணியில் இல்லாதபோது, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சஞ்சு சாம்சன் சதங்கள் விளாசியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக அவர் மிகவும் நன்றாக செயல்பட்டுள்ளார். சில நேரங்களில் அவர் குறைந்த ரன்களிலும் ஆட்டமிழந்திருக்கிறார். ஆனால், டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவதே அவருக்கு பொருத்தமானதாக இருக்கும்.
நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களுக்கு திலக் வர்மா, ஷிவம் துபே, ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். பழைய பந்தில் சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்ட ஜித்தேஷ் சர்மா பின் வரிசையில் இருக்கிறார். அவர் 7-வது இடத்தில் களமிறங்கி போட்டியை முடித்து கொடுக்க சரியான நபர். ஐபிஎல் தொடரில் 7-வது வீரராக களமிறங்கி அவர் பலமுறை போட்டியை முடித்துக் கொடுப்பதை பார்த்திருக்கிறோம் என்றார்.
இந்திய அணிக்காக இதுவரை 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 995 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.