

ஆஷஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடிலெய்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி, தொடரை இழக்காமலிருக்க அடிலெய்டு டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக மார்க் வுட் காயம் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மார்க் வுட் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் போட்டியில் அவர் 11 ஓவர்கள் மட்டுமே வீசினார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து விலகினார். தற்போது, ஆஷஸ் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாட் ஃபிஷர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக மார்க் வுட் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழக்கும் நிலையில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த நிலையில், பிரதான பந்துவீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளது அந்த அணிக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐபிஎல்: 350 வீரர்களுடன் மினி ஏலத்துக்கான இறுதிப்பட்டியல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.