

இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அதே வேட்கையுடன் இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது.
இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி பஞ்சாப் மாநிலம் நியூ சண்டீகரின் முல்லான்பூர் கிரிக்கெட் திடலில் இன்று (டிச.11) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸுடன் இணைந்து அற்புதமான தொடக்கத்தை அளித்தார். இருவரும் இணைந்து இந்திய பவுலர்களின் பந்துவீச்சை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டனர். அர்ஷ்தீப் மற்றும் பும்ரா ஓவரில் சிக்சர்களை பறக்க விட்டார்.
பும்ராவின் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய ஹென்ட்ரிக்ஸ், 8 ரன்களில் வெளியேற அடுத்துவந்த கேப்டன் மார்க்ரம் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து வருணின் பந்துவீச்சில் அக்ஷர் பட்டேலிடம் சிக்கினார்.
அதிரடி ஆட்டக்காரர் டெவால்டு பிரேவிஸ் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்து வெளியேற, மறுமுனையில் தொடக்கம் முதலே சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் நாலாபுறமும் அடித்து மைதானத்தைச் சுற்றிக் காட்டினார் டிகாக்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிகாக் 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசி 90 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார்.
கடைசி கட்டத்தின் டெனோவன் ஃப்ரெரிரா 16 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களும், டேவிட் மில்லர் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இந்திய அணி எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 22 ரன்களை வாரி வழங்கியது.
கடந்த போட்டியில் 74 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி, இந்தப் போட்டியில் அதிரடியைக் கையாண்டனர். இந்திய அணித் தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னணி பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். அதிலும் 11 ஓவரில் 7 வைடுகளுடன் 11 பந்துகளை வீசி ஏமாற்றமளித்தார். பும்ராவும் 4 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினாலும் விக்கெட் வீழ்த்தவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.