

ஷுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு நல்லதல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், சண்டீகரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் டி20 தொடரும் 1-1 என சமனில் உள்ளது.
இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில், நேற்றையப் போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் ஷுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் மீது விமர்சனங்கள் எழுந்தன. டி20 உலகக் கோப்பைத் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு நல்லதல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிகவும் நன்றாக பந்துவீசியதால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை என ஷுப்மன் கில் கூறுவார். சூர்யகுமார் யாதவை பொருத்தவரையில், அவர் ஆஃப் திசையில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஷுப்மன் கில் உண்மையில் ஃபார்மில் இருந்திருந்தால், முதல் பந்தில் ஆட்டமிழக்காமல் எளிதில் விளையாடியிருப்பார். ஆனால், அவர் ஃபார்மில் இல்லை. ஷுப்மன் கில் ரன்கள் குவிக்காமல் ஆட்டமிழப்பது அவர் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, அணி நிர்வாகத்தின் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
ஷுப்மன் கில் ரன்கள் குவிக்கவில்லை என்பதற்காக சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்த்து, அவர் கண்டிப்பாக ரன்கள் குவிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அணி நிர்வாகம் அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை எடுத்து வந்தால், நன்றாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பது சாம்சனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
சூர்யகுமார் யாதவ் மிகுந்த அழுத்தத்தில் இருப்பார். அணியின் கேப்டன் என்பதால், பிளேயிங் லெவனில் அவரது பெயர் கண்டிப்பாக இருக்கும். ஆனால், ஒரு வீரராக ஓராண்டில் நன்றாக ரன்கள் குவிக்கவில்லையென்றால், அவர் மீதான அழுத்தம் அதிகரிக்கும். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும். சரியான இடத்தில் களமிறங்கி, சரியான ஷாட்டுகளை தேர்வு செய்து அவர் விளையாட வேண்டும். நேராக வரும் பந்துகளை லெக் திசையில் அடிக்க முயற்சி செய்து அவர் ஆட்டமிழக்கிறார். அது போன்ற பந்துகளை ஆஃப் திசையில் அடித்து ரன்கள் எடுக்க அவர் முயற்சிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.