

ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக முக்கியமான வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவிக்க காரணம் என்ன என்பது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விளக்கமளித்துள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. மினி ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் வந்தனர். மேலும், டிரேடிங் மூலம் தங்களுக்குத் தேவையான வீரர்களை மற்ற அணிகளுடன் மாற்றிக் கொண்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் மிகவும் முக்கிய வீரர்களான கிளன் மேக்ஸ்வேல், ஆரோன் ஹார்டி மற்றும் ஜோஷ் இங்லிஷ் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். முக்கிய வீரர்கள் பலரும் விடுவிக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கான இடத்தை உருவாக்குவதற்காகவே அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களை விடுவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நாங்கள் விடுவிக்கும் மிகவும் முக்கியமான வீரர் கிளன் மேக்ஸ்வெல். கிளன் மேக்ஸ்வெல்லுடன் நான் நீண்ட காலமாக பயணித்துள்ளேன். அவருடைய விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். துரதிருஷ்டவசமாக, கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடவில்லை. எங்களது திட்டத்தில் அவர் இல்லாததால், அவரை விடுவித்தோம்.
கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஆரோன் ஹார்டிக்கு ஒரு போட்டியில்கூட கிடைக்கவில்லை. அவரைப் போன்ற வீரர்களை அணியிலிருந்து விடுவிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால், எங்களுக்கு வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு அதற்கான இடம் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே ஆரோன் ஹார்டியை விடுவித்தோம்.
கடந்த சீசனின் பாதிக்குப் பிறகு ஜோஷ் இங்லிஷ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பல காரணங்களுக்காக அவர் கடந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடவில்லை. இந்த சீசனில் அவரால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அதன் காரணமாக அவரை விடுவித்தோம் என்றார்.
ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக கிளன் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், ஆரோன் ஹார்டி, குல்தீப் சென் மற்றும் பிரவின் துபே ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடி கையிருப்புத் தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரிடோரியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.