

இந்திய அணியின் வீரர்கள் பலரும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருப்பதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடரானது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இரண்டாவது போட்டியில் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 19.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, மூன்றாவது வீரராக அக்ஷர் படேல் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தது அணியின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அக்ஷர் படேலை அவசியமின்றி மூன்றாவது வீரராக களமிறக்கியதாக இந்திய அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், போட்டியின் சூழ்நிலையைப் பொருத்து எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட வீரர்கள் பலரும் தயாராக இருப்பதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கிறார்கள். அணிக்காக நான் 3, 4, 5, அல்லது 6-வது வீரராகவும் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு ஒரு முடிவு சிறந்ததாக இருக்கும் என அணி நிர்வாகம் உணரும்போது, அனைவரும் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்திருக்கிறது. அக்ஷர் படேல் இதற்கு முன்பு, முன்கூட்டியே களமிறக்கப்பட்டு சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆட்டத்தின் சூழலைப் பொருத்தே அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருக்கும் என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி நாளை (டிசம்பர் 14) தர்மசாலாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.