

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறாததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விளம்பர பதாகை வெளியிடப்பட்டது.
ஐசிசி வெளியிட்ட அந்த விளம்பர பதாகையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்பட 5 அணிகளின் கேப்டன்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. சூர்யகுமார் யாதவை தவிர்த்து, தென்னாபிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறாததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இதே பிரச்னையை நாங்கள் எதிர்கொண்டோம்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் இடம்பெறாமல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பேசிய பிறகே அந்த நிலை மாறியது. இந்த முறையும் அதே பிரச்னையை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. டிக்கெட் விற்பனைக்கான விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனின் புகைப்படம் இடம்பெறவில்லை.
ஐசிசியின் டாப் 5 டி20 அணிகளில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. ஆனால், உலகக் கோப்பைத் தொடர்களில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஐசிசியின் விளம்பர பதாகைகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனின் புகைப்படத்தை ஐசிசி சேர்க்கும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணியின் பேட்டிங்கில் தெளிவு இல்லை: ராபின் உத்தப்பா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.