

பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையில் போதிய தெளிவு இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 19.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஷுப்மன் கில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கேப்டன் சூர்குமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் 3-வது வீரராக களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்திய அணியின் இந்த புதிய முயற்சி பலனளிக்கவில்லை. அக்ஷர் படேல் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையில் போதிய தெளிவு இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தவுடன், அக்ஷர் படேல் 3-வது வீரராக களமிறங்கினார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய தெரிவுகள் இருக்கும்போது, அக்ஷர் படேல் முன்கூட்டியே மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார். அந்த நேரத்தில் அதிரடியாக விளையாடி அக்ஷர் படேல் அபிஷேக் சர்மாவின் மீதான அழுத்தத்தைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால், அக்ஷர் படேல் நிதானமாக விளையாடி 21 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுத்தது அணியின் மீதான அழுத்தத்தைப் போக்கத் தவறியது.
அக்ஷர் படேல் நிதானமாக விளையாட அவரைச் சுற்றி இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. அக்ஷர் படேலை முன்கூட்டியே களமிறக்கிய இந்திய அணியின் அணுகுமுறை பலனளிக்கவில்லை. சர்வதேச அளவிலான போட்டிகளில் பேட்டர்கள் அவர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்பது குறித்து தெளிவான புரிதல் இருக்க வேண்டும். முதல் 6-8 ஓவர்களுக்குள் பேட்டிங்கில் சோதனை முயற்சியை மேற்கொள்வது தவறில்லை. ஆனால், பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது அணிக்கு வலுவான அடித்தளம் தேவைப்படும். வலுவான அடித்தளம் அமைக்காமல் மிகப் பெரிய வானுயர கட்டடத்தை எழுப்ப முடியாது.
ஒரு போட்டியில் வீரர்களை பல்வேறு சவால்களுக்கு தயார்படுத்த முயற்சிப்பது ரன்கள் குவிப்பதை மிகவும் சிரமமாக்கிவிடும். அந்த இடத்தில்தான் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை தவறவிட்டது. ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர்த்து, மற்ற வீரர்களின் இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க முயற்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.