

ஐபிஎல் மினி ஏலத்தில் பேட்டர்களுக்கான பிரிவில் தனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விளக்கமளித்துள்ளார்.
அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் நாளை மறுநாள் (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் எனப் பலரும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் தனது பெயர் பேட்டர்கள் பிரிவில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பந்துவீச தயாராக இருப்பதாகவும், தனது மேலாளர் தவறுதலாக பேட்டராக தன்னை ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் பந்துவீசுவதில் எனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. நான் கூறுவதை என்னுடைய மேலாளர் கேட்க விரும்புவாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் தவறுதலாக மிகப் பெரிய தவறை செய்துவிட்டார். அவர் என்னை பேட்டராக பதிவு செய்ய நினைத்து என்னுடைய பெயரைக் குறிப்பிடவில்லை. அவர் தற்செயலாக தவறான கட்டத்தை நிரப்பிவிட்டதாக நினைக்கிறேன்.
ஐபிஎல் மினி ஏலத்தை மற்ற வீரர்கள் சிலருடன் இணைந்து நான் பார்த்து கொண்டிருப்பேன். ஐபிஎல் ஏலத்தை பார்ப்பதற்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எந்த அணிக்கு செல்லவிருக்கிறோம், நம்முடைய அணியில் எந்த வீரர்கள் இணைவார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கும் என்றார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கேமரூன் கிரீன், கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். காயம் காரணமாக 2025 ஐபிஎல் சீசனில் அவர் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் கேமரூன் கீரினை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கேமரூன் கிரீனுக்கு அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.