

ஐபிஎல் மினி ஏலத்தின் கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று (டிச.16) மதியம் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி விடுவித்தது.
அதன்படி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 10 அணிகளும் தங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்ப மினி ஏலத்தில் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
அந்த வகையில் மினி ஏலத்தில் பங்கேற்கும் கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை அணியிடம் ரூ.2.75 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளது.
அதேவேளையில், சென்னை (ரூ.43.40 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.16.40 கோடி), ஹைதராபாத் (ரூ.25.50 கோடி), குஜராத் (ரூ.12.90 கோடி), ராஜஸ்தான் (ரூ. 16.05 கோடி), தில்லி (ரூ. 21.80 கோடி), லக்னௌ (ரூ. 22.95 கோடி), பஞ்சாப் (ரூ. 11.50 கோடி) தொகையை வைத்துள்ளன.
மினி ஏலத்தில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1,355 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 1005 வீரர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு, 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 350 பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், மினி ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக, பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஷீர்ஸ் உள்பட 19 பேரின் பெயர்கள் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் தேர்வான அபிமன்யு ஈஸ்வரன், கடைசி வரை இந்திய அணிக்காக விளையாடவில்லை.
அதைத் தொடர்ந்து இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத அபிமன்யு ஈஸ்வரன், இந்தத் தொடரிலும் அவர் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இருப்பினும், ஏதோவொரு ஐபிஎல் அணியின் வேண்டுகோளின் பேரில் அவரதுப் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் மலேசிய வீரர் விரந்தீப் சிங், தென்னாப்பிரிக்காவின் கைல் வெர்ரைன், கார்பின் போஷின் சகோதரர் ஏதன் போஷ், ஜிம்பாப்வேயின் முஸாரபானி, தேசிய போட்டிகளில் விளையாடாத கேரள வீரர் கே.எல். ஸ்ரீஜித் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இறுதிப்பட்டியலில் மொத்தமாக 369 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.