

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வேண்டுமென காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி லக்னௌவில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ-டம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னிந்தியாவில் எந்த ஒரு மாசு தொடர்பான பிரச்னையும் இல்லாததல், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்தலாம். பனிமூட்டம் காரணமாக பார்க்கும் குறைபாடு ஏதும் இங்கு இல்லாததால், ரசிகர்களும் போட்டியை கண்டுகளிக்க முடியும். பனிப்பொழிவு அதிகம் இருக்கும் நேரத்தில் ஏன் போட்டிகளை வட இந்தியாவில் விளையாடுமாறு அட்டவணை அமைக்க வேண்டும்? அதற்குப் பதிலாக போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்தும்படி அட்டவணையை அமைத்திருக்கலாம் என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாதில் நாளை (டிசம்பர் 19) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.