

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததற்கான காரணம் குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிசம்பர் 20) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார். அக்ஷர் படேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படவில்லை. சிறப்பான ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்திய போட்டிகளில் போதிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறியதாலும், அணியின் காம்பினேஷன் காரணத்தினாலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படவில்லை என இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் தரமான வீரர் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அவர் போதிய அளவில் ரன்கள் குவிக்கத் தடுமாறினார். துரதிருஷ்டவசமாக, கடந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெறவில்லை. ஏனெனில், அணியின் காம்பினேஷன் காரணமாக அவரை சேர்க்க முடியவில்லை. 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும்போது, யாராவது ஒருவர் அணியில் இடம்பெற முடியாமல் போகும். துரதிருஷ்டவசமாக, இந்த முறை ஷுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை என்றார்.
அண்மையில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் 4, 0 மற்றும் 28 ரன்கள் முறையே எடுத்தார். காயம் காரணமாக கடைசி டி20 போட்டியில் அவர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.