

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாதில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். திலக் வர்மா 73 ரன்களும், ஹார்திக் பாண்டியா 63 ரன்களும் எடுத்தனர். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 16 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார்.
இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள்
யுவராஜ் சிங் - 12 பந்துகளில் (இங்கிலாந்துக்கு எதிராக, 2007)
ஹார்திக் பாண்டியா - 16 பந்துகளில் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2025)
அபிஷேக் சர்மா - 17 பந்துகளில் (இங்கிலாந்துக்கு எதிராக, 2025)
கே.எல்.ராகுல் - 18 பந்துகளில் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)
சூர்யகுமார் யாதவ் - 18 பந்துகளில் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2022)
இரண்டாவது அதிவேக அரைசதம் மட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஹார்திக் பாண்டியா படைத்தார். இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ரோஹித் சர்மா (4231 ரன்கள்), விராட் கோலி (4188 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (2788 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (2265 ரன்கள்) உள்ளனர்.
இதுவரை இந்திய அணிக்காக 124 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா, 2002 ரன்கள் மற்றும் 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.