

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிசம்பர் 20) அறிவித்தது. அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் குவிக்க மிகவும் தடுமாறி வருகிறார். இந்த ஆண்டு 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 218 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 13.62 ஆக உள்ளது. மேலும், இந்த ஆண்டில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த நிலையில், மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: விஷயங்கள் சரியாக செல்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப எனக்கு சிறிது நேரமிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த சிறிய தடையிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன். எனக்கு மிகவும் நல்ல பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளது நல்ல சவாலாக இருக்கப் போகிறது என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் குரூப் ஏ பிரிவில் நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி இந்திய அணி, அமெரிக்காவுக்கு எதிராக அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.