

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாதில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
காயம் காரணமாக கடைசி டி20 போட்டியிலிருந்து ஷுப்மன் கில் விலகினார். அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 37 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தார்.
தோனி, ரிஷப் பந்த் வரிசையில்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 37 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 1000 ரன்களைக் கடந்த 14 வீரர் என்ற பெருமை சஞ்சு சாம்சனையேச் சேரும். மேலும், இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த மூன்றாவது விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த விக்கெட் கீப்பர் பேட்டர்களாக இருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் சஞ்சு சாம்சனும் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 1032 ரன்கள் எடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.